சென்னை குயர் இலக்கிய விழா 2019
நாள்: 14 செப்டம்பர் 2019 - காலை 10.00 முதல் 5.30 வரை | இடம்: கவிக்கோ மன்றம், சென்னை - 04
பால்புதுமையினரின் இலக்கியங்கள் இந்திய அளவில் மிகவும் குறைவாக இருக்கின்ற நிலையில் அவற்றைப் பற்றிய உரையாடல்களை ஏற்படுத்தவும், அவ்விலக்கியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசவும் 2018ல் தொடங்கப்பட்ட குயர் இலக்கியவிழா அடுத்தகட்டமாக சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியங்கள் என புதிய உரையாடல்களுடன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
அமர்வு 1: அனைவருக்குமான சிறார் இலக்கியம்
புத்தகங்கள் நமது எண்ணங்களையும்,உலகத்தின் மீதான பார்வையையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. வரப்போகும் காலங்களில் வயது வந்தோருக்கு இருக்கக்கூடிய அளவில் சிறாருக்கான இலக்கியங்களும் எல்லா சிறார்களையும் உள்ளடக்கிய இலக்கியங்களும் எழுதப்பட வேண்டிய அவசியமிருக்கிறது. இதன் மூலம் சிறாருக்கு ஒரு பரந்த பார்வை உருவாகுவதுடன் “இயல்பானவர்கள் அல்ல” என்று சொல்லி விடுகிற சிறார்களையும் உள்ளடக்க முடியும். உள்ளடக்கிய (inclusive) இலக்கியம் என்பது வேறுபட்ட நபர்களைப் பற்றிய கதைகள் அல்லது வேறுபட்டதாகக் கருதப்படுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு ஊடகம் அல்ல. அதற்கு பதிலாக சுவாரஸியமான கதைகள் மூலமாக நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து மனிதர்களையும் பேசுவதாக இருக்க வேண்டும். இந்த அமர்வில் நாம் வாசிக்கும், நாம் கொண்டாடும் எழுத்துக்கள் நாம் வாழும் வேறு வேறான மனிதர்களைக் கொண்ட உலகை நமக்கு காட்டுகிறதா என்பது குறித்து உரையாட இருக்கிறோம்.
பேச்சாளர்கள்: ஷால்ஸ் மஹஜன், சாலை செல்வம்.
அமர்வு 2: பால்புது இலக்கியத்தில் ஓவியங்கள்
கலை என்பது ஒரு கருத்தியல். வார்த்தைகளால் விவரிக்க முடியாத புலன்களால் உணரமுடிகிற ஒரு உணர்வு. ஒரு கலைப்படைப்பு ஆயிரம் வார்த்தைகளைப் பேசும் என்று நாம் எளிதாகச்சொன்னாலும் அக்கலையை நுகரும் நம் அனைவரையும் அக்கலை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா? இலக்கிய வட்டத்துக்குள் தற்போது இயங்கும் கலைவடிவங்கள் அனைத்து தரப்புமக்களுக்கானதாகவும் இருக்கிறதா? அல்லது இயல்பு எனும் விதிக்குள் அடங்கி விடுகிறதா? கலை என்பது மக்கள், அவர்களது நிலை, அரசியல் போன்றவற்றை எளிதாக புரியவைக்கும் பலசித்தரிப்புகள் மற்றும் கருத்துக்களின் வெளிப்பாடு. அதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தின் சிந்தனைகளை மேம்படுத்துவதோடு வார்த்தைகளால் விளக்க முடியாத கருத்துக்களையும் விளக்குகிறது. கலை தன்னளவியேலே தத்துவங்களையும் அரசியலையும் பரப்புகிறது.
பேச்சாளர்கள்: மாரி, வை. வழிநடத்துநர்: செந்தில்.
அமர்வு 3: மலையாளத்தில் பால்புது இலக்கியம்
கேரளா தனது புவியியல் அமைப்பில் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையால் பிரிந்து நிற்கிறது. பழங்காலத்தில் தொடர்ந்த வெளிநாட்டவர் வருகையாலும் கலாச்சார ரீதியாக கேரளா தனிப்பட்ட முறையில் வளர்ந்துள்ளது. இது கேரள இலக்கியத்திலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக ஒருபாலினக் காதல், மற்றும் திருநர் அடையாளங்களில். பெண்ணிய எழுத்தாளர்களான கமலாதாஸ் போன்றவர்களின் வீரியமான, உண்மையான எழுத்துகள் பால்புது எழுத்தாளர்களுக்கு ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த அமர்வில் சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரையான மலையாள பால்புது இலக்கியம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் இவ்வமர்வில் “ரண்டு புருஷன்மார் சும்பிக்கும்போள்” எனும் தனது மலையாள சுயசரிதையின் ஒரு பகுதியை அதன் எழுத்தாளர் வாசிக்கவிருக்கிறார்.
பேச்சாளர்கள்: கிஷோர்.
அமர்வு 4: மொழிபெயர்ப்பு - ஒரு உரையாடல்
மொழிபெயர்ப்பு என்பது ஒரு அசலான பிரதியில் வேரிலிருந்து முளைக்கும் புதியமரம் – கவிஞர் யாங் லியான். புதிய மரம் நிச்சயமாக பழையதிலிருந்து வேறுபட்டே இருக்க வேண்டும். அந்த வேறுபாட்டையே நாங்கள் உரையாட விரும்புகிறோம். மொழிபெயர்ப்பு குறித்த இந்த உரையாடல்கள் நமது பார்வையை விரிவு படுத்துவதாக இருப்பதோடு நாம் எதைத் தெரிந்தும் அங்கீகரிக்காமல் இருக்கிறோமோ அதை தெரியவைப்பதாகவும் இருக்கவேண்டும். எந்தெந்த குரல்கள் நம்மால் கேட்கப் பட்டிருக்கின்றன? எந்தெந்த குரல்கள் கேட்காமல் போயிருக்கின்றன?
இலக்கிய வாசிப்பு
இது உங்கள் எண்ணங்களுக்கான மேடை. விதிமுறைகள் எளிதானது. ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் எடுத்த தலைப்பில் என்னென்ன பேச முடியுமோ பேசுங்கள். கவிதைகள், கட்டுரைகள், இசை, பாடல், நகைச்சுவை, நாடகம் என என்நவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உங்களது வார்த்தைகளை உங்களுக்கு பிடித்தபடி உங்களால் முடிந்தபடி பேசுங்கள்.
எங்களோடு இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள், qlf@queerchennaichronicles.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.
~*~*~